கு. முனியசாமி
மான்போல் துள்ளும்
இளமை வேண்டும்
மயில்போல் ஆடும்
திறமை வேண்டும்
வான்போல் பரந்த
மனம் வேண்டும் - நாடு
வறுமையை வென்ற
நிலை வேண்டும்...
ஆனென்ற அகந்தை
அகன்றிட வேண்டும்
அறியாமை இருள்நம்மை
விலகிட வேண்டும்
ஏனென்ற கேள்வி
எழுந்திட வேண்டும் - எங்கும்
இல்லாமை இல்லை
என்பது வேண்டும்...
காதலைப் போற்றும்
பெற்றவர் வேண்டும்
கவிதையை ரசிக்கும்
நண்பர்கள் வேண்டும்
இசையை ரசிக்க
தெரிந்திட வேண்டும் - ஈதல்
இலையெனி லன்றே
சாதல் வேண்டும்...
ஊருக்கு உழைக்கின்ற
உள்ளங்கள் வேண்டும்
ஒற்றுமைதான் உயர்வு
உணர்ந்திட வேண்டும்
வைகையில் கங்கை
கலந்திட வேண்டும் - நம்முள்
வங்கமும் சிந்துவும்
இணைந்திட வேண்டும்...
இலங்கையில் அமைதி
திரும்பிட வேண்டும்
ஈழம் உதிக்க
உதவிட வேண்டும்
புஸ்ஸும் சதாமும்
கைகொள வேண்டும் - என்றும்
புவியில் அமைதி,
ஒற்றுமை வேண்டும்...
No comments:
Post a Comment