Sunday, December 27, 2020

நானும் ஒரு கவிஞன்

செந்தமிழ் சொல்லெடுத்து 
சேதிசில சேத்து வச்சு
எதுகையினை எட்டித் தொட்டு
மோனைதனை முத்த மிட்டு.

வார்த்தைகளை மடக்கிப் போட்டு
வாழ்க்கைதனை சொல்ல வந்த
நானும் ஒரு கவிஞன்
நம்புங் கய்யா நம்புங்க.

தில்லையில் கூத்தனே
தென்பாண்டி நாட்டானே
அல்லல் அறுப்பானே
ஆண்டவனே வேண்டுகிறேன்.

சித்தர்கள் வாழ்ந்த நிலம்
சிவனே எம்சொந்தம் 
அத்தன் அருள் இருந்தால்
சித்தம் நிலையாகும்.

ஆறடி நிலம் கூட 
ஆண்டவர்க்கு சொந்த மில்லை.
ஓர்பிடி சாம்பல் கூட
உ ந்தனுக்கு மிச்சம் இல்லை.

மண்மேல் ஆசை 
மரணம் வரை விடுவதில்லை 
பொன்மேல் ஆசை 
புத்தி கெட்டும் போவதில்லை..

பெண்மேல் ஆசை 
பித்தனையும் விட்ட தில்லை
பெற்றதனால் மட்டும்
பிள்ளை உந்தன் சொந்த மில்லை.

அத்தை மகள் என்பார்
ஆசையிலே பேதலிப்பார்
சித்தம் தெளிந்து விட்டால்
நித்தம் புலம்பி நிற்பார்.

சுந்தரத்தின் மோகம்
சுட்ட பின்பு காணவில்லை
அந்தரத்தில் நானும்
சிந்தனைகள் ஒன்னும் இல்லை.

எத்தனை ஓட்டம்
எதைத்தேடி இந்த ஓட்டம்
இளமை போன பின்பு
இச்சை கூட மிச்சம் இல்லை.

வானம் எவருக்கும்
வஞ்சனைகள் செய்வ தில்லை
வந்தவர்கள் யாரும்
நித்தியமாய் நின்ற தில்லை

நாளைய தினம் என்று
நம்கையில் ஒன்னும் இல்லை
இன்றைய தினம் ஒன்றே
இருக்குதப்பா நம்கையில்.

வந்த வழியெல்லாம்
நிந்தனைகள் பல உண்டு
சிந்தையில் சிவன் இருந்தால்
விந்தைகள் பல கூடும்.

No comments: